You are here

கல்வி 2.0 - கற்றல் கற்பித்தலில் இணைய நுட்பங்கள்

Article Subjects: 
Date: 
May, 2016

உலகில் உணவு, பொருட்கள், மருத்துவம் ஆகிய அனைத்தையும் விட கல்வியே மிக வேகமாக விலை உயர்ந்துவருகிறது.[1]  பெரும் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து பட்டப்படிப்பைப் பெற்றாலும் அக்கல்வியை முழுமையாகப் பயன்படுத்தும் தொழில்கள் பெரும்பான்மையினருக்கு கிட்டுவதில்லை.[2]  அதே வேளை புதிய அறிவுகளும் திறன்களும் தேவைப்படும் தொழில்வாய்ப்புகள் தொடர்ச்சியாக உருவாகி வருகின்றன.  தொழில்களில் தம்மைத் தொடர்ச்சியாக இற்றைப்படுத்திக் கொள்வதும், புதிய அறிவுகளைப் பெற்றுக் கொள்வதும் வழமையாகி வருகிறது.  இவ்வாறு வேகமாக விரிவாகிவரும் மாறிவரும் அறிவுச் சூழலில் கல்வியின் தேவை முன் எப்பொழுதையும் விட உயர்வாகவே உள்ளது.  இத்தேவையை பல்வேறு குறைபாடுகளைக் கொண்ட பாடசாலை-பாடநூல்-ஆசிரியர் முறையிலான இன்றைய கல்விமுறையால் பூர்த்தி செய்ய முடியவில்லை, முடியாது.  இணையமும் அதன் ஊடாக வளர்சிபெறும் நுட்பங்களும் நாம் கல்வி கற்கும் கற்பிக்கும் முறையைப் புரட்டிப் போட்டு வருகின்றன.  இணையத் தகவல் மூலங்கள், மெய்நிகர் கற்றல் சூழல்கள் (virtual learning environments), திறந்த பாடத்திட்டங்கள், உள்ளடக்கங்கள், பாரிய திறந்த இணைப்பு வகுப்புகள் (massive open online courses), சகா-சகா கல்வி (peer-to-peer education), சமூகக் கற்றல் (social learning) ஆகிய நுட்பங்களையும் கல்வி முறைகளையும் அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.  


உலகில் உள்ள கணினிகள் எல்லாம் தம்மிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பரவிய நுட்பக் கட்டமைப்பே இணையம். இணையம் 1970 களில் வடிவமைக்கப்பட்டது.  தொடக்காலத்தில் பெரும் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுக்கு இடையே மட்டுமே இணையம் இருந்தது.  இணையம் ஊடான மின்னஞ்சல் (email), கோப்புப் பரிமாற்றம் (file sharing), பயனர்வலை (Usenet) ஆகியவை ஊடாகத் தகவல் பரிமாற்றம் நடந்தது.  இன்று பரவலாக அறியப்பட்ட இணைப்புகளோடான (hyperlink) வலைத்தளங்களைக் (websites) கொண்ட உலகளாவிய வலை (worldwide web) 1990 களில் உருவாக்கப்பட்டது. இது ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராச்சியாளர்கள் தமது ஆய்வு ஆவணங்களை இலகுவில் பகிர்ந்து கொள்ள உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டது.  இணையத்தில் உள்ள தகவல்களை கண்டுபிடிக்கத் தேடுபொறிகள் உதவுகின்றன.  


தொடக்கத்தில் உலகளாவிய வலையில் தகவல்களைப் பகிர்வதும், ஊடாடுவதும் நுட்பச் சிக்கல் நிறைந்த ஒரு செயற்பாடாகவே இருந்தது.  ஆனால் இன்று மன்றம் (forum), வலைப்பதிவு (blog), விக்கி (wiki), பல்லூடகம் (multimedia), எழுத்து/ஒலி/ஒளி உரையாடல் (conferencing), திரைப் பகிர்வு (screen sharing/remote connection), சேர்ந்தியங்குக் கருவிகள் (collaboration tools), வலைச் செயலிகள் (web applications) எனப் பல தீர்வுகள் உள்ளன.  இணையம் ஊடாக உலகத்தில் உள்ள யாரும் யாருடனும் இலகுவாகத் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் (information sharing), நிகழ்நேரத்தில் ஊடாடவும் (interaction), பல பேர் பல இடங்களில் இருந்து சேர்ந்தியங்கவும் (distributed collaboration) முடியும்.  இன்று இந்த உள்கட்டமைப்பில் மரபுசார் கல்விமுறைக்கான மாற்றுக்கள் உருவாகி வருகின்றன.


இணையத் தகவல் மூலங்கள்

நீண்ட காலமாக தகவல்களையும் தரவுகளையும் மனப்பாடம் செய்தலே அறிவு வெளிப்பாட்டின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது.  சோதனைகள் இதனையே முதன்மையாச் சோதித்தன.  தொழில் இரகசியம் போன்று தகவல்களையும் கேள்விகளையும் ஒளித்து வைத்து சிறிது சிறிதாகப் பல ஆசிரியர்கள் பகிர்ந்தனர்.  இணையம் ஊடாக தேடி தகவல்களையும் தரவுகளையும் எளிதில் எங்கிருந்தும் பெற்றுவிடலாம் என்னும் போது தகவல்களைப் போதிப்பதன் முக்கியத்துவம் குறைந்தது.  கல்வியின் இலக்குகள் விரிவுபடுத்தப்பட்டன. தகவல்களை பகுப்பாய்ந்து விமர்சன நோக்கில் புரிந்து கொள்ளல், தகுந்த முறையில் பயன்படுத்தல், பன்முகத் திறன்களைப் பெறுதல் முதன்மை பெறுகின்றன.   எடுத்துக்காட்டாக ஒரு முதாலாவது ஆண்டு மருத்துவ மாணவர் உயிர்வேதியியல் வழித்தடங்களைப் பற்றி தனக்கு விருப்பமான இடத்தில் இருந்து தகவல்களைப் படித்துக் கொள்ளலாம்.  வகுப்பில் ஊன்ம ஆக்கச் சிதைவு நோய் உள்ள ஒரு குழந்தையுடன், அவரின் பெற்றோர்களுடன், அவருக்கு மருத்துவம் வழங்கும் மருத்துவருடன், உயிரிவேதியியல் பேராசிரியருடன், பிற மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். இத்தகைய ஊடாட்டம் (interaction/engagement) நூலில் வெற்றுத் தகவல்களாக உள்ள உயிர்வேதியியல் பாடத்துக்கு ஓர் உயிரோட்டம் கொடுக்கும்.[3]  இவ்வாறு ஆசிரியர்களின் நேரத்தை கூடிய திறனாகப் பயன்படுத்த இணையம் ஊடான கல்வி முறைகள் உதவுகின்றன.  மின்னஞ்சல், கோப்புப் பரிமாற்றம், பயனர்வலை (Usernet), வலைதளம், தரவுத்தளம் (database), தேடுபொறி முதற்கொண்ட தகவல் பகிர்வை இணையம் ஊடான கல்வியின் முதல் கட்டமாகக் குறிப்பிடலாம்.


மெய்நிகர் கற்றல் சூழல்கள் (Virtual Learning Environments)

இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் மாணவர்கள் பழைய பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், விடைகள், பயிற்சிகள், குறிப்புகள் ஆகியவற்றை இணையம் ஊடாகப் பகிர்ந்தார்கள்.  முதலில் ஆசிரியர்களும் கல்விக்கூடங்களும் இதனை எதிர்த்தன.  ஏன் என்றால் புதிய வினாத்தாள்களை எழுதுவது கூடிய வேலையாக அமைந்தது.  சில மாணவர்கள் படியெடுத்தும் புள்ளிபெற்றார்கள்.  நாளடைவில் தடுக்க முற்படுவதன் இயலாமையைப் புரிந்துகொண்டு ஆசிரியர்களே இந்தத் தகவல்களை வகுப்பின் தொடக்கத்திலேயே பகிர்ந்தார்கள்.  வினாக்களும் பயிற்சிகளும் படியெடுக்க முடியாதவாறு வடிவமைக்கப்பட்டன.  மேலும் இணையத்திலேயே பயன்படுத்தக் கூடிய இயங்குபடங்கள் (animations), ஒப்புருவாக்கங்கள் (simulations), பயிற்சிகள், புதிர்கள், உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டன.  ஆசிரியர்களின் விரிவுரைகள் நிகழ்படமாகப் பதியப்பட்டு மாணவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் வசதி செய்துதரப்பட்டது.   இணைய மன்றங்கள், உரையாடல்கள் ஊடாக மாணவர் ஊடாட்டமும் ஊக்கப்படுத்தப்பட்டது.  இத்தகைய பல்வகை வகுப்புசார் கூறுகளை இணையம் ஊடாக நிறைவேற்ற உதவும் மென்பொருட்களை வகுப்பு மேலாண்மை மென்பொருட்கள் (course/class management system) என்பர்.  உள்ளடக்க மேலாண்மை மட்டும் இல்லாமல் வகுப்புகளை நேர அட்டவணைப்படுத்தவும், மாணவர்களின் முன்னேற்றத்தையும் மதிப்பீடுகளையும் பதிவுசெய்யவும், பல்வேறு நிர்வாகப் பணிகளைச் செய்யவும் கூட மென்பொருட்கள் பயன்படுகின்றன.  இவற்றை கற்றல் மேலாண்மை மென்பொருட்கள் (learning management system) என்பர்.  இவற்றின் ஊடாக பெளதீக வகுப்புகளே இல்லாமல் முற்றிலும் இணையத்தின் ஊடாகவே கல்வி கற்க முடியும்.  எ.கா ஒன்ராறியோவின் மெய்நிகர் உயர்பாடசாலை (virtualhighschool.com) பெரும்பாலான பாடங்களை இணையம் ஊடாக வழங்குகிறது.  ஐக்கிய இராச்சியத்தின் திறந்த பல்கலைக்கழகம் (open.ac.uk) முழுமையான பட்டப்படிப்புக்களை இணையம் ஊடாக வழங்குகிறது.  இவற்றுக்கு இன்னுமொரு பொதுப் பெயர் மெய்நிகர் கற்றல் சூழல் (virtual learning environment) என்பதாகும்.  இந்த மென்பொருட்களின் பயன்பாட்டுக் கூறுகள் சிறிது வேறுபட்டாலும் அடிப்படையில் வகுப்பு-நூல்-ஆசிரியர் அடிப்படையிலான கல்வி முறையை இவை மாற்றி அமைக்கின்றன.  இவற்றுக்கு கட்டற்ற மென்பொருட்களான மூடுள் (moodle.org), சாகை (sakaiproject.org), ஏரூற்ரர் (atutor.ca), கிளாரோலைன் (claroline.net) வணிக மென்பொருட்களான பிளக்போர்ட் (blackboard.com) மற்றும் டிசையர்2லேர்ன் (desire2learn.com) ஆகியன சிறந்த எடுத்துக்காட்டுக்கள்.  


திறந்த பாடத்திட்டங்கள், உள்ளடக்கங்கள்

மெய்நிகர் கற்றல் சூழல்கள் வகுப்பறையை இணையத்துக்கு கொண்டு வந்தன.  ஆனால் பெரும்பாலான அந்த இணைய வகுப்பறைகள் தொடக்கத்தில் பூட்டப்பட்டே இருந்தன.  அந்தந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பதிவுசெய்த மாணவர்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்தும் அனுமதி இருந்தது.  இந்தச் சிக்கலைத் தீர்க்க உருவாக்கப்பட்டவைதான் திறந்த பாடத்திட்டங்கள் மற்றும் திறந்த உள்ளடக்கத் திட்டங்கள்.  2002 ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றான மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்லூரி முதலாவது விரிவான திறந்த பாடத்திட்டத்தைத் (ocw.mit.edu) தொடங்கியது.  இன்று அக் கல்லூரியின் அனைத்து பாடத் திட்டங்கள், பாட உள்ளடக்கங்கள் (நூல்கள், குறிப்புகள், விரிவுரை, நிகழ்படங்கள், பயிற்சிகள், பரிசோதனைகள்) இணையத்தில் இலவசமாக அனைவருக்கும் கிடைக்கின்றன. இவற்றை இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற பல்வேறு நாட்டு கல்விக்கூடங்களும் பல்லாயிரக்கணக்கான தனிநபர்களும் பயன்படுத்துகிறார்கள்.  இதனைத் தொடர்ந்து உலகின் பல தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தமது பாடங்களை திறந்த நிலையில் பகிர்ந்துள்ளன.  எ.கா. ocwconsortium.org, openlearn.open.ac.uk, webcast.berkeley.edu.


இதே போன்று பல்கலைக்கழகங்கள் சாராத பல்வேறு திட்டங்களும் உள்ளன.  இவற்றில் பரவலாக அறியப்பட்டது கான் கல்வியகம் (khanacademy.org) ஆகும்.  படிப்படியாக சொல்லித்தரும் நிகழ்படங்கள், இயங்குபடங்கள், செயலிகள், பயிற்சிகள், சமூக வலைப்பின்னல் எனப் பல்வேறு வழிகளில் ஒருவர் கற்க கான் கல்வியகம் உதவுகிறது.  விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிபல்கலைக்கழகம் (wikimedia.org) ஆகியவையும் திறந்த உள்ளடக்கதுக்கான நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.  academicearth.org ஆயிரக்கணக்கான விரிவுரைகளை இலவசமாகத் தருகிறது.  textbookrevolution.org நூற்றுக்கணக்கான பாட நூல்களை இலவசமாகத் தருகிறது.


பாரிய திறந்த இணைப்பு வகுப்புகள் (Massive Open Online Courses)

திறந்த பாடத்திட்டங்கள் உயர்தரமான பாடங்களை மாணவர்களுக்கு வழங்கின.  ஆனால் மாணவர்கள் சேர்ந்து கற்கவோ, மதிப்பீடுகளைப் பெறவோ, சான்றிதழ்களைப் பெறவோ முடியவில்லை.  இந்த இடைவெளியை கோர்செரா (coursera.org), யுடாசிற் (udacity.com), எட்.எக்சு (edx.org) போன்ற கல்வித் தளங்கள் பூர்த்தி செய்கின்றன.[4]  இந்த திட்டங்களில் வழங்கப்படும் வகுப்புகளுக்கு பிற கல்லூரிகளில் போன்று மாணவர்கள் சேர முடியும்.  பின்னர் மாணவர்கள் அந்த வகுப்பின் உள்ளடக்கத்தை, விரிவுரைகளை, பயிற்சிகளை பிற மாணவர்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்.  புதிர்களையும் (quiz) சோதனைகளையும் (tests) பயன்படுத்தி தமது முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.  தற்போதைய மாதிரியின் படி அதிகாரபூர்வமாக மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்குவதற்கு மட்டுமே கட்டணம் அறவிடுகிறார்கள்.  2011 இல் கோர்செரா அறிமுகப்படுத்தப்பட்ட போது சுமார் 100 000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு வகுப்புகளையும் எடுத்தார்கள்.  2012 இல் அதே மாதிரி பாரிய மாணவர் தொகையுடன் இம் மூன்று தளங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.  வழமையாக பல்கலைக்கழகங்களில் ஒரு வகுப்புக்கு அதிக பட்சம் 400-1000 வரையான மாணவர்களே பங்கேற்பார்கள் என்பதை இங்கு ஒப்பிட்டால், கல்வியை அனைவருக்கும் எடுத்துச் செல்வதில் இத் தளங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்பதை உணரலாம்.[4]


சகா-சகா கற்றல் (Peer-to-Peer), சமூகக் கற்றல் (Social Learning)

முழுமையான இணையக் கற்றல் முறைகள் தானாகக் கற்றலை ஏதுவாக்கின்றன, ஊக்குவிக்கின்றன.  ஆனால் இதன் ஒரு குறைபாடு நேரடி மனித வழிகாட்டல், வகுப்புத் தோழமை இல்லாமை ஆகும்.  இக் குறையை சகா-சகா கற்றல், சமூகக் கற்றல் முறைகள் பூர்த்தி செய்கின்றன.  


சகா-சகா கற்றல் இயல்பாக தொன்று தொட்டு நடைபெறும் ஒரு செயற்பாடுதான்.  ஆனால் இணையம் அதற்காக கூடிய வசதிகளைச் செய்கிறது.  திறன் பகிர்வகங்களில் (எ.கா www.swapsity.ca) ஒருவர் தனக்கு என்ன என்ன திறங்கள் உள்ளன என்றும், தான் என்ன என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறார் என்று கூறுவார். இங்கு இருவரின் தேவைகளுக்குப் பொருத்தம் ஏற்பட்டால், அவர்கள் தமது திறன்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.  எ.கா ஒருவர் தமிழ் படிக்க விரும்புகிறார், இன்னுமொருவர் சீனம் கற்க விரும்புகிறார்.  இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கற்பிக்கலாம். இதை இணையத்தின் ஊடாகத்தான் செய்ய வேண்டுமென்றில்லை.


சமூகக் கற்றல் என்பது சகா-சகா கற்றலின் நீட்சி ஆகும்.  இணையத்தில் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு இடையேயான சமூக வலைப்பின்னல் (social network) போன்று கற்றலுக்கான வலைபின்னல்கள் உண்டு.  இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இசுராக் ஓவர்ஃபுலோ (stackoverflow.com) போன்ற துறைசார் கேள்வி பதில் தளங்கள் ஆகும்.  இங்கு ஒரு நிரலாளர் தான் சந்திக்கும் சிக்கலைப் பற்றிய கேள்வியை கேட்கலாம்.  அக் கேள்விக்கு பிற நிரலாளர்கள் பதில் தருவார்கள்.  தரப்பட்ட பதில்களில் இருந்து சரியான பதிலை கேள்வி கேட்டவர் தேர்தெடுக்கலாம்.  இத் தளத்தில் கேட்கப்படும் பெரும்பான்மைக் கேள்விகளுக்கு சரியான பதில்கள் சில மணித்தியாலங்களில் கிடைத்துவிடும்.  சரியான பதில்களைக் கொடுக்கும் நிரலாளர்களுக்கு நன்மதிப்புக் கிடைக்கிறது, வேலைக்கான நேர்காணல்களில் கூட இந்த நன்மதிப்பு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.


ஆசிரியரை மையப்படுத்திய கல்விமுறையில் இருந்து விலகி, எல்லோரும் எல்லோரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம் என்ற  மாதிரிக்கான நகர்வை இணையக் கல்விச் சமூகங்கள் செய்கின்றன.  இது "ரியூசன்" பண்பாட்டுக்கு சவாலாக அமையும்.  மாணவர் சமூகங்கள் அல்லது துறைசார் சமுகங்கள் (communities of practice) தாமாக இயல்பான கற்றலில் ஈடுபடுவதற்கான கட்டமைப்பை சமுகக் கற்றல் நுட்பங்கள் வழங்குகின்றன.


தமிழ்ச் சூழலில்

தமிழ்ச் சூழலில் தமிழில் கற்றல் கற்பித்தலுக்கு மேற் கூறிய இணைய நுட்பப் பயன்பாடுகள் பின்தங்கியே அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறன.  தமிழ்நாடு அரசு நூல்கள் (textbooksonline.tn.nic.in), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துறைசார் வலைவாசல்கள் (agritech.tnau.ac.in/ta/index.html), குழந்தைகள் நலம் (aboutkidshealth.ca/En/HealthAZ/Multilingual/TA/Pages), கணியம் (kaniyam.com), தொழில்நுட்பம் (thozhilnutpam.com), வரலாறு (varalaaru.com), ccat.sas.upenn.edu/plc/tamilweb போன்ற தமிழ் கற்க உதவும் தளங்கள் மற்றும் பிற பல வலைத்தளங்கள் தமிழில் கல்விசார் தகவல்களை வழங்குகின்றன.  தமிழ் இணையக் கல்விக்கழகம் (tamilvu.org), விக்கியூடகங்கள் (ta.wikipedia.org),  நூலகத் திட்டம் (noolaham.org), வேளாண் தகவல் ஊடகம் (agriinfomedia.com), இருகலப்பாசி திட்டம் (diatom.gubbilabs.in/root/tamil), அறுசுவை (arusuvai.com/tamil/) போன்ற தளங்கள் மெய்நிகர் கற்றல் சூழலின் சமூகக் கற்றலின் பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளன.  ஆனால் தமிழில் பல நிலைகளில் விரிவான முழுமையான மெய்நிகர் சமூகக் கற்றச் சூழல்களின் தேவை உள்ளது.  குறிப்பாக பெளதீக வளங்களைக் குறைவாகக் கொண்ட இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு இது உள்ளது.


தமிழில் இணைய நுட்பங்களை எடுத்துச் செல்வதில் இலங்கையிலும் இந்தியாவிலும் இணையம் இன்னும் பெரும்பான்மையினரைச் சென்றடையாதது, தமிழில் கணினியைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள், மரபுசார் கல்விமுறையில் இருந்து எழும் எதிர்ப்பு போன்றவை முதன்மைத் தடைகளாக உள்ளன.  ஆனால் இத் தடைகளை மீறி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஒரு அறிவுசார் சமூகத்தை கட்டமைப்பதற்கு அவசியம் ஆகும்.


இணையத் தகவல் மூலங்கள், மெய்நிகர் கற்றல் சூழல்கள், திறந்த பாடத்திட்டங்கள் உள்ளடக்கங்கள், பாரிய திறந்த இணைப்பு வகுப்புகள், சகா-சகா கல்வி, சமூகக் கற்றல் ஆகியவை தாமாகக் கற்றலையோ கற்பித்தலையோ செய்யாது.  ஆனால் கல்வியை எல்லோருக்கும் எங்கும் எப்பொழுதும் எடுத்துச்செல்வதற்கு இந்த இணைய நுட்பங்கள் ஒரு முதன்மைப் பங்கை வகிக்கும்.  மாணவர்களின் திறமைகளை, பல்வகை அறிவுகளை, கல்வி கற்கும் இயல்பை, விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்ட, அவரவருக்கு ஏற்ற ஒரு பூரண கல்விமுறையை அமைப்பதற்கு இத் தொழில்நுட்பங்கள் உதவும்.  குருகுலக் கல்விமுறையில் இருந்து கல்விக்கூட கல்விமுறைக்கு ஏற்பட்ட நகர்வைப் போன்ற ஒரு பெரிய, மக்கள்மயப்படுத்தும் ஒரு நகர்வாகவே இது அமைக்கிறது.  இந்த பாரிய மாற்றத்துக்குத் தமிழ்ச் சமூகம் தம்மை தயார்படுத்திக் கொள்வது காலத்தின் தேவை ஆகும்.



மேற்கோள்கள்

[1] Daphne Koller. (சூன் 26, 2012). பாரிய இணைப்புக் கல்வி (Massive online education). ரெக்ரோக்சு. எடுக்கப்பட்ட இடம்: http://blog.ted.com/2012/06/26/massive-online-education-daphne-koller-at...


[2] யோர்டன் வெயிசுமன். (ஏப்பிரல் 23, 2012). அண்மையில் பட்டம்பெற்ற 53% கல்லூரி மாணவர்களுக்கு வேலை இல்லை, தகுதி குறைந்த வேலையில் உள்ளார்கள்-எப்படி?. அற்ரலான்ரிக். எடுக்கப்பட்ட இடம்: http://www.theatlantic.com/business/archive/2012/04/53-of-recent-college-grads-are-jobless-or-underemployed-how/256237/


[3] சார்ள்சு புரோபர். (மே 3, 2012). விரிவுரை இல்லாத விரிவுரை அரங்குகள்: ஒரு மருத்துவக் கல்விக்கான முன்மொழிவு. மருத்துவத்துக்கான நியூ இங்கிலண்ட் ஆய்வேடு. எடுக்கப்பட்ட இடம்: http://www.um.es/c/document_library/get_file?uuid=c538d7e7-52a4-4f9a-93c...


[4] கிரெக்கொரி ஃபிரென்சுரெயின். (மே 9, 2012). வழியை விடு மிற், இசுரான்போர்ட் உண்மையான "கல்விப் புரட்சியைக்" கொண்டுள்ளது.  ரெக்கிறச். எடுக்கப்பட்ட இடம்: http://techcrunch.com/2012/05/09/move-over-harvard-and-mit-stanford-has-the-real-revolution-in-education/


உசாத்துணைகள்

ரெரி அன்டறசண். (2004). இணைப்புக் கல்வி நோக்கிய ஒரு கோட்பாடு. அதபசுகா பல்கலைக்கழகம். எடுக்கப்பட்ட இடம்: http://cde.athabascau.ca/online_book/contents.html


மைக்கல். (மார்ச் 2012). இணையக் கல்வி புரட்சி பட்டயக் கல்வியை கொல்லுமா?. ஃபாசுற்கம்பனி. எடுக்கப்பட்ட இடம்: http://www.fastcoexist.com/1679315/does-the-online-education-revolution-...

Theme by Danetsoft and Danang Probo Sayekti inspired by Maksimer