You are here

மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்

Article Subjects: 
Date: 
May, 2016

மனித உரிமைகள் மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாக இருக்கும், விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத, சட்ட அரசியல் வடிவங்கள் உடைய உரிமைகள் ஆகும்.  இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகள் ஆகும்.  வாழும் உரிமை, சுதந்திரம், சித்திரவதைக்கு உட்படா உரிமை, சட்டத்தின் முன் சமநிலை, அரசில் பங்களிக்க உரிமை, தன்னாட்சி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம், கூடல் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், சொத்து உரிமை, கல்வி உரிமை, உணவுக்கான உரிமை, மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, தேசியதுக்கான உரிமை உட்பட்ட மனித உரிமைகள் மனிதர்களுக்கு உரித்தான உரிமைகள் ஆகும்.  இந்த உரிமைகள் மனிதன் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியான உரிமைகளாகும்.

 

காலம் காலமாக மனித உரிமைகளை வரையறுத்து பல்வேறு வெளிப்படுத்தல்கள் நிகழ்ந்துள்ளன.  இவற்றுள் 1948 ம் ஆண்டு ஐக்கிய நாடுகளால் முன்வைக்கப்பட்டு, பெரும்பான்மை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலக மனித உரிமைகள் சான்றுரை முக்கியமானது.  இது அடிப்படை குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளை வரையறை செய்கிறது.  ஐக்கிய நாடுகளால் 1976 ம் ஆண்டு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்கை மக்களின் தன்னாட்சி உரிமையை மேலும் விரிவாக உறுதி செய்து, கல்வி, நலம், தொழில் சார் உரிமைகளையும் வலியுறுத்துகிறது.  இவற்றைப் பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், இவற்றை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு நாடுகளையே சார்கிறது.  இவை கனடா, ஐக்கிய அமெரிக்கா, நேர்டிக் நாடுகளில் இவை சிறப்பாக நிறைவேற்றப் படுகின்றன.  குறிப்பாக கனடாவில் இந்த உரிமைகள் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம்  ஊடாக சட்ட அரசியல் வடிவம் கொடுக்கப்பட்டு மிக நுணுக்காக நிறைவேற்றப்படுகிறது.  ஆனால் இலங்கை, ஈரான், சீனா, உருசியா, சூடான், சோமோலியா, சவூதி அரேபியா, வட கொரியா போன்ற பல நாடுகளில் இவை புறக்கணிக்கப்பட்டு, மிக மோசமாக மீறப்படுகின்றன.

 

மனித உரிமைகள் பேணப்படாதால்தான் இலங்கை சீரழிந்த ஒரு நாடு ஆனதற்கு முதன்மைக் காரணம்.  பின் வரும் புள்ளி விபரங்களை நோக்குக, இவை இலங்கை மனித உரிமைகள் மீறுவதில் மிக மோசமான நாடுகளில் ஒன்று என்பதை துல்லியமாக காட்டுகின்றன.

 

தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண் – 2008 – #1 (அதி மோசமான நாடு)

தவறிய நாடுகள் சுட்டெண் – 2008 – #20 (மோசமான தவறிய நாடுகளில் ஒன்று)

ஊடக சுதந்திர சுட்டெண் – 2008 – 165/173 – (அதி மோசமான நாடுகளில் ஒன்று)

ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும் – 11,513 (1980-96) ஐநா அறிக்கை, உலகில் இரண்டாம் நிலை.

 

 

1948ம் ஆண்டு மலையகத் தமிழர்கள் குடியுருமை இழந்தார்கள், பெளத்தம் அரச சமயம் ஆக அறிவிக்கப்பட்டது, 1956 தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது, கல்லோயப் படுகொலைகள் நடந்தன, இதைத் தொடர்ந்து தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெற்றது, 1967 இல் கல்வித் தரப்படுத்தல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன, 1974 தமிழ் அறிஞர்கள் கொல்லப்பட்டார்கள், 1977 இல் தமிழர்கள் நாடெங்கும் கொல்லப்பட்டார்கள், 1981 இல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது, 83 கறுப்பு யூலை, இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழர் இனப்படுகொலைகள் படு மோசமாக நடைபெற்றன.  இலங்கையில் விழுமிய அடிப்படையிலும், நடைமுறையிலும் மனித உரிமைகள் பேணப்படவில்லை.  சமூக, அரசியல், சட்ட, சமய தளங்கள் எதுவும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை.   இதனால்தான் போர், அழிவு, அவலம் எல்லாம் ஏற்படுகிறது.  இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் ஆவர்.  இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது அனைத்து சமூகங்களின் வாழ்வியலை மேம்படுத்த அவசியமாகிறது. 

 

இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமைகளைப் எப்படிப் பேணலாம், மேம்படுத்தலாம்.  இது ஒரு சிக்கலான இலக்கே.  தொடக்க கட்டமாக மனித உரிமை மீறல்கள் கண்காணிக்கப்பட்டு, விரிவாக ஆவணப் படுத்தப்பட்டு, உலக அரங்கில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.  பன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புகள் இதைச் செய்ய முற்பட்டாலும், இலங்கை நோக்கி இவர்கள் தரக்கூடிய அக்கறை மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது.  இலங்கையில் நடைபெற்ற, நடைபெறும் மனித உரிமை மீறல்களை புறவயமாக, துல்லியமாக, ஆதாரங்களூடன் ஆவணப்படுத்தி, இத்தகைய மனித உரிமை அமைப்புகளுடனும், மேற்குநாட்டு அரசுகளுடனும், மக்களுடனும் பகிர வேண்டியது ஒரு முக்கிய பணியாகும்.  இந்தப் பணியை மேற்கொள்வதை தனது முதன்மை இலக்காகக் கொண்டதே போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம்  ஆகும்

 

போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஒரு சுதந்திர, இலாப நோக்கமற்ற, பக்க சார்பற்ற, மனித உரிமைகள் அமைப்பாகும்.  போ.பா.ம.உ.ந போரால் பாதிக்கப்பட்ரோரைப் பற்றியவர்களின் தகவல்களையும் மனித உரிமை மீறல்களையும் பன்னாட்டு நியமங்களுக்கு ஏற்ப ஆவணப்படுத்துவதில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது.  இந்த செயற்பாட்டை நாம் 10 நாடுகளில் பல்வேறு  அமைப்புகளுடன் ரொறன்ரோவை மையமாக வைத்து ஒருங்கிணைக்கிறோம். 

 

ஆவணப்படுத்தலின் ஒரு முக்கிய நோக்கு இறந்தவர்களின் வாழ்க்கைக் கதையை, வரலாற்றைப் பதிவு செய்தல் ஆகும்.  தமிழர்கள் இறந்த ஒவ்வொருவருக்கும் கல்வெட்டு எழுதும் மரபு கொண்டவர்கள்.  இன்று பல்லாயிரக்கணக்கில் பாதிக்கப்பட்ட நாம், எம்மவர்களின் கதைகளைப் பதிவு செய்தல் எமது கடமையாகும்.  கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 20 000 மேற்பட்டோரர இழந்த, பல்லாயிரக்கணக்காணோர் சிறையில் அடைக்கப்பட்ட, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தகவலை நாம் உலகுக்கு சரிவர கூறவில்லை என்றால், நாம் ஒரு முக்கிய கடமையைச் செய்வதில் இருந்து தவறி விடுவோம்.  நாளை பல வகைப்பட்ட பரப்புரைகள் எமது இழப்புக்களை திரித்து, மறைத்து, எல்லோரையும் பயங்கரவாதிகள் என்று கூறிவிடும் அபாயம் உண்டு.  இந்த மாதிரி அவலங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, எமக்கு விழுப்புணர்வு அவசியம்.  ஆவணப்படுத்தலின் ஊடாகவே நாம் அறிந்த உண்மைய, ஆதாரங்களுடன், ஆவணங்களுடன், சாட்சியங்களுடன் மக்களுக்கு, மனித உரிமை அமைப்புகளுக்கு, நாட்டு அரசுகளுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  

 

ஆவணப்படுத்தலின் இன்னொரு நோக்கம் எமது பாதிப்புகளை சிங்கள மக்களுக்கும், குடிசார் அமைப்புகளுக்கும் எடுத்துச் சொல்லி, அங்கு ஒரு கொள்கை மாற்றத்தை, நடைமுறை மாற்றத்தை உருவாக்க உதவுவதாகும்.  இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தற்போதைய சூழலில் இந்த மாதிரி ஆவணப்படுத்தலை இலங்கையில் மேற்கொள்வது ஆபத்தானது என்றும், ஆனால் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த மிகவும் அவசியமான ஒரு பணியும் என்று போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவத்துடன் நடந்த கலந்துரையாடலில் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.   

 

தேசிய, அனைத்துலக மனித உரிமை நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரனைக்குட்படுத்த வேண்டுமென்று

கேட்டு வருகின்றன.  இதை அவர்கள் நிறைவேற்ற உந்த, மனித இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிக்க எமக்கு ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள் ஆகியவை அடிப்படையில் அமைந்த ஆவணப்படுத்தல் தேவையாகிறது.  

 

போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் 20 ஆண்டுகளுக்கு மேலாக விருத்தி செய்யப்பட்ட மனித உரிமைகள் தகவல் மற்றும் ஆவணப்படுத்தல் முறைமைக்கு (HURIDOCS - Human Rights Information and Documentation System) ஏற்ற முறையிலே தகவல்களைப் பதிவு செய்கிறது.  இது பாதுகாப்பான, கணினிமயப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது.  ஒருவர் தரும் தகவல்கள் அவருடைய அனுமதி இன்றி வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.  புள்ளிய அறிக்கைகள் மட்டும் வெளியிடப்படுகிறது. 

 

ரொறன்ரோவில் உள்ள இந்த நடுவம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, பெல்சியம், ஒல்லாந்து, யேர்மனி, நோர்வே, சுலீடன், டென்மார்க் ஆகிய நாடுகளிலுள்ள மனித உரிமை நடுவஙடகளுடன் இணைந்து பெப்ரவரி 15ஆம் நாள் தொடக்கம் எப்பிரல் 15 வரை இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டவர்களினதும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களினதும் விபரங்களை ஆவணப்படுத்தும் நாட்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.

 

நீங்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் நீங்கள், அல்லது உங்கள் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் நீங்கள் பதிய வேண்டும்.  இடப்பெயர்வு, ஊனமாக்கப்படல், காணாமல் போதல், சிறைவைப்பு, சித்தரவதை, பாலியல் வன்முறை, படுகொலை என எல்லாவிதமான மனித உரிமை மீற்ல்களால், போர் குற்றங்களால், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் ஆவணப்படுத்தலை அனைவரும் இன்றே விரைந்து விரைந்து வேண்டும். 

 

 

Theme by Danetsoft and Danang Probo Sayekti inspired by Maksimer