You are here

தமிழ் விக்கிப்பீடியா: தமிழால் இணைவோம், அறிவால் வெல்வோம்

Article Subjects: 
Date: 
May, 2016

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அறிவு ஒர் அடிப்படைக் கருவி. அச் சமூகத்தின் மொழியில் தகவல்களும் அறிவும் பகிரப்படும்பொழுது அம் மொழி சார்ந்த சமூகம் வலுப் பெறுகிறது.  தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய தமிழ்ச் சமூகத்துக்கு தேவையான அறிவை கூட்டாக உருவாக்கிப் பகிர்வதற்கான செயற்திட்டம் ஆகும்.

தமிழ் விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.  கலைக்களஞ்சியம் என்பது பல்துறைத் தகவல்களின், அறிவுகளின் தொகுப்பாகும்.  உலக வரலாற்றில் புரட்சிகர முன்னேற்றங்களுக்கு கலைக்களஞ்சியங்கள் உதவி உள்ளன.  முதலாவது விரிவான தற்காலக் கலைக்களஞ்சியம் பிரான்சிய மொழியில் 1751 ம் ஆண்டு வெளிவந்த என்சைக்கிளோப்பீடியா ஆகும்.  பல்துறைத் தகவல்களையும், அறிவொளிக் காலச் சிந்தனைகளையும் உள்ளடக்கி இக் கலைக்களஞ்சியம் வெளிவந்தது.  இதுவே முடியாட்சிக்கு எதிராகவும், சமவுரிமை-சகோதரத்துவம்-விடுதலை என்ற கோட்பாட்டுக்குச் சார்பாகவும் நிகழ்ந்த பிரான்சிய மக்கள் புரட்சிக்கு (1789-1799) வித்திட்ட அறிவுப் பின்புலம் ஆகும். [2]

பிரான்சிய என்சைக்ளோப்பீடியா பிரித்தானியாவில் என்சைக்ளோப்பீடியா ஓப் பிரித்தானிக்கா வெளிவர உந்துதலாக அமைந்தது.  இது முதன் முதலில் 1768 ஆண்டில் வெளிவந்தது.  18 தொகுதிகளைக் கொண்ட விரிவான வெளியீடு 1797 இல் நிகழ்ந்தது.  18, 19 ம் நூற்றாண்டுகளில் பிரித்தானியாவில் நிகழ்ந்த தொழிற்துறைப் புரட்சிக்கு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியமும், அதற்கு முன்னர் வெளிவந்த சைக்ளோப்பீடியா (Cyclopaedia) ஆகிய இரண்டும் பெரிதும் உதவின[3].  இவற்றின் மூலம் அறிவு இலகுவாக விரைவாகப் பகிரப்பட்டது.  யேர்மன் கலைக்களஞ்சியம் (Oekonomische Encyklopädie - 1773), உருசிய கலைக்களஞ்சியம் (Brockhaus and Efron Encyclopedic Dictionary - 1890) ஆகிய கலைக்களஞ்சியங்கள் அந்த அந்த நாடுகளின் எழுச்சிக்கு உதவின.

தமிழ் மொழி நீண்ட இலக்கிய வரலாற்றையும், தொகையான இலக்கியப் படைப்புக்களையும் கொண்டது.  எனினும் அறிவியல் தொழில்நுட்ப விடயங்களைத் தொகுத்த நூல்கள் மிகச் சிலவே.  தொல்காப்பியம், திருக்குறள், பெரியபுராணம் போன்ற நூல்களில் பலவகைச் செய்திகள் காணப்படினும் அவை அறிவியல் தொழில்நுட்பம் பற்றி விடய நோக்கில் விளக்கவில்லை.  தமிழில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியங்கள் இலக்கிய கலைக்களஞ்சியங்களே.  யாழ்ப்பாணத்தில் 1902ம் ஆண்டு வெளியிடப்பட்ட அபிதானகோசம் கலைக்களஞ்சிய வடிவில் வெளிவந்த முதல் தமிழ்ப் படைப்பு ஆகும்.  அதை அடுத்து ஆ. சிங்காரவேலு அவர்களின் முயற்சியால் அபிதான சிந்தாமணி என்ற கலைக்களஞ்சியம் 1910ம் ஆண்டு வெளிவந்தது.  இதுவும் ஒர் இலக்கிய கலைக்களஞ்சியம் ஆகும்.  

தமிழின் முதல் விரிவான பல்துறைக் கலைக்களஞ்சியம் 1954 - 1968 ம் ஆண்டுக் காலப் பகுதில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும்.  பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து இது உருவாக்கப்பட்டது.  இதே காலப் பகுதியில் 10 தொகுதிகள் கொண்ட குழந்தைகள் கலைக்களஞ்சியமும் வெளியிடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து 1980 களில் தொடங்கி் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 19 தொகுதிகளைக் கொண்ட அறிவியல் கலைக்களஞ்சியத்தையும், 15 தொகுதிகள் கொண்ட வாழ்வியல் கலைக்களஞ்சியத்தையும் 13 தொகுதிகள் கொண்ட மருத்துவக் கலைக்களஞ்சியத்தையும் வெளியிட்டுள்ளது.

2004 ம் ஆண்டு விகடன் பதிப்பகம் ஆங்கில பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தின் சுருங்கிய பதிப்பைத் தமிழில் மொழிபெயர்த்து மூன்று தொகுதிகளாக வெளியிட்டது.  இதில் 28,000 கட்டுரைகளும், 2400 ஒளிப்படங்களும் உள்ளன.  தமிழ்க் கலைக்களஞ்சியம் தற்போது அச்சில் இல்லை.  தமிழ்க் கலைக்களஞ்சியம் தவிர்த்து மேற்கூறிய எந்த தமிழ்க் களஞ்சியமும் எண்மிய வடிவில் இல்லை.  தமிழ்க் கலைக்களஞ்சியமும் பயன்படுத்த இலகுவான வடிவில் இன்னும் பகிரப்படவில்லை.

விக்கிப்பீடியா எண்மிய வடிவில் உள்ள, இணையத்தின் மூலம் பயன்படுத்த வல்ல கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டம் ஆகும்.  விக்கிப்பீடியா பயனர்களால் கூட்டுழைப்பாக ஆக்கிப் பயன்படுத்தப்படுகிறது.  2001 ம் ஆண்டு இத்திட்டத்தை சிம்மி வேல்சு, லாரி சங்கர் ஆகிய இரு அமெரிக்கர்கள் தொடங்கினர்.  இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் வலைத்தளங்களில் ஐந்தாம் (மாதாந்தம் 400 மில்லியன் பயனர்கள்) இடத்தில் இது உள்ளது.  இத் திட்டத்தில் 285 மொழிகளில் விக்கிப்பீடியாக்களும், அவற்றில் 25 மில்லியனுக்கு மேற்பட்ட கட்டுரைகளும் (மார்ச் 2013) உள்ளன.  இவற்றோடு விக்சனரி, விக்கி செய்திகள், விக்கி நூல்கள், விக்கி மூலம் போன்றும் மேலும் பல உறவுத் திட்டங்களும் உள்ளன. இத் திட்டங்கள் இலாப நோக்கமற்றவை, அரசியல் சமய வர்க்க சார்பற்றவை.

தமிழ் விக்கிப்பீடியா இத் திட்டத்தின் ஒர் அலகாகும்.  தமிழ் விக்கிப்பீடியா 2003 நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரியும் ஈழத் தமிழர் மயூரநாதனால் தொடங்கப்பட்டது.  இன்று (மார்ச் 2013) தமிழ் விக்கிப்பீடியாவில் 51,750 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன.  48, 500 [4] மேற்பட்ட பதிவு செய்த பயனர்களும், 29 நிர்வாகிகளும் உள்ளனர்.  தமிழ் விக்கிப்பீடியா ஒவ்வொரு நாளும் 193,548 முறை பாக்கப்படுகிறது[5].  தமிழ் விக்கிப்பீடீயாவுக்கு இலங்கை, இந்தியா, அசுத்திரேலியா, மலேசியா, கனடா, யேர்மனி, நோர்வே, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் என பல நாடுகளில் இருக்கும் தமிழர்கள் பங்களிக்கிறார்கள்.

மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராச்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது வாசகர்கள் என பலதரப்பட்டோருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுகிறது. எ.கா தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை பாட வேலைக்குப் பயன்படுத்துகிறார்கள். “தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது” என்று தலைமையாசிரியர் ஜோதிமணி கூறுகிறார்.[6] தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து பல தகவல்களைப் பெற்றும், தமிழ் விக்கிப்பீடியாவின் நடையை அலசியும் முனை.ரெ.கார்த்திகேசு "தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும்" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.[7]

தமிழ் விக்கிப்பீடியாவின் தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், புவியியல், சமூகம், நபர்கள் ஆகிய முதன்மைப் பகுப்புகள் உள்ளன.  இந்தப் பகுப்புகளுக்குள் மேலும் சில துணைப் பகுப்புகள் என்றும் அமைந்திருக்கின்றன.  யாரும் தமக்குத் தெரிந்த விடயத்தை கட்டுரையாக விக்கியில் சேக்கலாம்.  பிறர் எழுதிய கட்டுரைகளில் விளக்கம் குறைவாக இருந்தால் நாம் புதிய, விரிந்த விளக்கங்களைத் தரலாம். படங்களை, வரைபடங்களை, புள்ளி விவரங்களை இணைக்கலாம்.  இவ்வாறு கூட்டாக தமிழ் விக்கிப்பீடியா உருவாகின்றது.  இதைப் பயன்படுத்த, அல்லது இதற்கு பங்களிக்க உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் விக்கிப்பீடியர்களைத் தொடர்பு கொள்ளவும்.  அவர்கள் இயன்றவரை உங்களுக்கு உதவுவார்கள்.   

[1]
Paul Romer. (2009). A Theory of History with an Application. Fora.tv. http://fora.tv/2009/05/18/Paul_Romer_A_Theory_of_History_with_an_Application  

[2]
Encyclopédie. (2010, January 6). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 03:06, January 7, 2010, from http://en.wikipedia.org/w/index.php?title=Encyclop%C3%A9die&oldid=336215549

[3]
Industrial Revolution. (2010, January 7). In Wikipedia, The Free Encyclopedia. Retrieved 03:08, January 7, 2010, from http://en.wikipedia.org/w/index.php?title=Industrial_Revolution&oldid=336313698
[4]
http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias 

[5]
http://shijualex.in/analysis-of-the-indic-language-statistical-report-2012/

[6]
http://www.luckylookonline.com/2009/10/blog-post_03.html மாங்குடி மாறிய கதை  

[7]
தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும்", பன்னாட்டுத் தமிழ் மொழியியல் மாநாடு, குவால லும்பூர்: மலாயாப் பல்கலைக் கழகம், 23-24 அக்டோபர் 2009 

 

Theme by Danetsoft and Danang Probo Sayekti inspired by Maksimer