You are here

கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளிகள்

Article Subjects: 
Date: 
October, 2012

காற்று, நீர், உணவு போன்றே மனிதருக்கு அடிப்படையானது தகவல். எது உணவு, எது நஞ்சு என்று அறிவதில் இருந்து மருந்து, மரபகராதி, தொழில்நுட்பம், அரசு என்று அனைத்து தளங்களுக்கும் அடிப்படையானது அறிவு. இன்றைய அறிவுச் சமூகத்தின் பொருளாதார மூலம் அறிவு ஆகும். எவ்வாறு நிலம் நிலவுடமைச் சமூகத்தின் பொருளாதார மூலமாக அமைந்ததோ, அதே போலவே தகவல் அல்லது அறிவு இன்றைய பொருளாதாரத்தின் மூலமாக அமைகிறது. யார் அறிவையும், அதன் கட்டமைப்புக்களையும் உருவாக்குகிறார்களோ கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே பொருளாதாரத்தையும், மனித சமூகத்தின் பொது நலத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெறுகிறார்கள்.

நிலவுடமைச் சமூகத்தில் நிலத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பெரும்பாலான மக்களை நிலக்கிழார்கள் எவ்வாறு கட்டுப்படுத்தினார்களோ, அதேபோல இன்று சில பெரும் பன்னாட்டுக் கம்பனிகளும் உள்நாட்டு கம்பனிகளும் அறிவைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். கணினித்துறை, ஊடகத்துறை, மருத்துவம், வேளாண்மை, பண்பாட்டுத்துறை, கல்வி என எல்லாத் துறைகளையும் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றன. உலகின் 90% கணினிகள் மைக்ரோசோப்ட் விண்டோசு இயங்குதளத்தில் இயங்குகின்றன. இதை மைக்ரோசோப்ட் நிறுவனம் பல நேர்மையற்ற, சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் நிறைவேற்றியது.[1] கூகிள் நிறுவனம் உலகின் அனைத்து நூல்களையும் (130 மில்லியன்) எண்மியப்படுத்தி விற்பனை செய்ய முயற்சி செய்கிறது. இது ஏகபோகத்தன்மையானது என்று நீதிபதி தற்காலிகமாக இதைத் தடுத்துள்ளார்.[2] உலகின் பெரும்பான்மை செய்தித் தாள்களை, இதழ்களை, தொலைக்காட்சிச் சேவைகளை, வானொலிகளை, திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களை, வலைத்தளங்களை ஐந்து நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. அவையானவை வேல்ட் டிசுனி கம்பனி (Walt Disney), நியூசு கார்புரேசன் (News Corporation), ரைம்ச் வேர்னர் (Time Warner), வியாக்காம் (Viacom), சிபிஎசு (CBS). உலகின் 90% மரபணு மாற்றப்பட்ட விதைகளை மொன்சன்ரொ நிறுவனம் (Monsanto) கட்டுப்படுத்துகிறது. அடிப்படை மருந்துகள், கல்வி நூல்கள் என எல்லாத் துறைகளையும், எல்லாத தளங்களையும் ஐம்பது வரையான வணிக நிறுவனங்களே கட்டுப்படுத்தப்படுகின்றன.

தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டையும், வரலாற்றையும், கலைகளையும், தமிழ்த் திரைத்துறையும் அதைத் கட்டுப்படுத்தும் பெரும் நிறுவனங்களும் ஏகபோகம் செய்கின்றன. சண் பிச்சேர்சு, ஏவிஎம் புரடக்சன்சு, பிரமிட் சைமிரா போன்ற நிறுவனங்களே தமிழ்த் திரைப்படங்களின் பெரும்பான்மை காப்புரிமையைக் கொண்டுள்ளன. திரைத்துறை சாராத கலைத்துறையே தமிழ்ச் சூழலில் இல்லை அல்லது அரிது. அத்தகைய ஆதிக்கம் கொண்ட துறையை ஒரு சில குடும்பங்களும் அவர்களின் கம்பனிகளும் கட்டுப்படுத்துகின்றன. தமிழ்நாட்டு ஊடகத் துறையை சண், விகடன், குமுதம், இந்து போன்ற நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. கல்வித்துறையும் தனியார் கல்வி வணிகங்களிடம் இருக்கிறது.

சமூகத்தின் அறிவுத் துறைகள் பெரும் வணிக நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருப்பது சமூக நலனுக்கு நல்லதல்ல. சிந்தனைச் சுதந்திரத்திற்கும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும், தனிமனித சமூக வளர்ச்சிக்கும், பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் இத்தகைய ஏகபோகம் தடையாக அமைகின்றது. இதற்கு மாற்றாக முன்வைக்கப்படுவதுதான் கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளிகள்.  கட்டற்ற என்றால் ஆங்கிலத்தில் free as in freedom (சுதந்திரம், விடுதலை) என்ற பொருளுக்கு இணையாகத் தமிழில் மென்பொருட் துறையில் பயன்படுத்தப்படுகிறது. படைப்பாக்க என்றால் creativity (படைப்புத் திறன், ஆக்கதிறன்) அல்லது innovative (புத்தாக்கம்) என்ற பொருளிலும் பொதுவெளி அல்லது பொதுமங்கள் என்றால் commons என்ற பொருளிலும் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுமங்கள் சமூகத்துக்கு புதியவை அல்ல. கடல், குளம், காடு, பூங்கா, நூலகம், சனசமூக நிலையம், பாடசாலை, பொது இடங்கள், குமுகத் தோட்டம், கைத்தொழில்கள், கலைகள், சமையல்கள் என்று சமூகத்தில் பொதுமங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை போன்றே சமூகத்துக்கு தேவையான அறிவும் அதற்கான தளங்கள் அல்லது தொழில்நுட்பங்களும் கட்டற்ற முறையில் பொதுவெளியில் இருத்தல் அவசியமாகும்.

பொதுமங்களைப் பாதுகாப்பதும் வளர்த்தெடுப்பது எல்லோருக்கும் பயன்படும் என்றாலும் சிலர் நியாமற்ற முறையில் அவற்றை தனியுரிமை கொள்கிறார்கள். பொதுமங்களை தனியார் வணிகங்களாக மாற்றுகிறார்கள். வணிகங்கள் அல்லது சந்தைப் பொருளாதாரம் மட்டுமே சமூகத்துக்கு செல்வத்தையும் சொத்தையும் உருவாக்கித் தருவதற்கான சிறந்த வழி என்று கூறப்படுகிறது. ஆய்வுக்கும், உள்கட்டமைப்புக்கும், மூலப் பொருட்களுக்கும் பெரும்பாலும் பொதுமங்களையே வணிகங்கள் சார்ந்து இருந்தாலும் இந்த மாயை முன்னெடுத்து சிலர் இலாபம் ஈட்டுகிறார்கள். வணிகங்கள் எவ்வாறு மனிதரின் பல தேவைகளை பூர்த்தி செய்ய அவசியமோ, அதே போலவே மனிதரின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய பொதுமங்கள் தேவை. மேலும் வணிகங்களைக் கட்டுப்படுத்தவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் பொதுமங்கள் தேவை.[3]

ஆக்கர்கள் தகுந்த முறையில் மதிக்கப்பட வேண்டும், அவர்களின் ஆக்கங்களால் பயன்பெற வேண்டும் என்பது மிக நியாமான கோரிக்கையே. அதே வேளை எந்த ஒரு படைப்போ ஆக்கமோ வெற்று வெளியில் நிகழ்வதில்லை. ஒர் ஆக்கத்திற்கு அதன் சூழலும் முக்கிய பங்காற்றுகின்றது. அப்படியிருக்க இக் கால காப்புரிமைச் சட்டங்கள் மிக இறுக்கமான முழுமையான கட்டுப்பாட்டை இந்தப் பெரும் நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இதனாலேயே வாய்மொழிக் கதைகளில் இருந்தும், பாடல்களில் இருந்து, கூத்துக்களில் இருந்தும், கலைகளில் இருந்தும் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கான முழு உரிமையை இந்த நிறுவனங்கள் பெறுகின்றன. இதனாலேயே காலம் காலமாக மக்கள் பயன்படுத்தி வந்த மூலிகைகளை, மருந்துகளை, உணவுகளை, விதைகளை நிறுவனங்கள் காப்புரிமைக்கு உட்படுத்துகின்றன. இதனாலேயே கல்விக்கு அடிப்படையாக விளங்கும் பாட நூல்களும், பாடத் திட்டங்களும் உச்ச விலைக்கு விற்கப்படுகின்றன.

ஒர் ஆக்கத்தைப் பகிர்வதற்கு, மீளமைப்பதற்கு, திருத்தியமைப்பதற்கு சுதந்திரம் இருக்கும் போதுதான் அங்கு ஒரு நலம் மிக்கப் படைப்புச் சூழல் தோன்றும். எவ்வாறு மூடிய மொழி, மூடிய கணிதம், மூடிய புவியியல், மூடிய அறிவியல் சாத்தியம் இல்லையோ அவ்வாறே மூடிய இசை, மூடிய மென்பொருள், மூடிய பாடநூல், மூடிய விதை மனித சமுதாயத்திற்கு கெடுதலாக அமையும்.[4] ஆகவேதான் கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளியைப் பாதுகாக்கவென, உருவாக்கவென சமூக இயக்கங்கள் தோற்றம் பெற்றன.  

கட்டற்ற அறிவையும் அதற்கான தளங்களையும் உருவாக்குவதற்கான, பாதுகாப்பதற்கான சமூக இயக்கங்கள் தகவல் புரட்சியின், கணினித்துறை வளர்ச்சியின் தொடக்கம் முதலே (1970 களில்) உருவாகின. கணினித்துறை, இணையம் தோன்றிய ஐக்கிய அமெரிக்காவிலேயே இந்த கட்டற்ற இயக்கமும் தோன்றிற்று. இதில் முதன்மையாக, கேட்பாட்டு நோக்கிலும், செயற்பாட்டு நோக்கிலும் செயற்பட்டது கட்டற்ற மென்பொருள் இயக்கம் (fsf.org) ஆகும். முதலில் மென்பொருட்கள் எழுதப்படத் தொடங்கிய போது நிரலாளர்கள் தம்மிடையே நிரல்களையும், அவை பற்றிய தொழில் அறிவையும் பகிர்வது இயல்பாக நடந்தது. தொடக்கத்தில் கூடிய வருமானம் வன்பொருட்களை விற்பதிலேயே இருந்ததால் பெரும் நிறுவனங்கள் தமது நிரலாளர்களின் செயற்பாடுகள் குறித்து பெரும் அக்கறை காட்டவில்லை. ஆனால் 1970 களின் இறுதியில், 1980 களின் தொடக்கத்தில் மென்பொருட்களை காப்புரிமைக்கு உட்படுத்தி, அவற்றையே மூல விற்பனைப் பொருட்களாக ஆக்க மைக்ரோசோப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் முயற்சி செய்து வெற்றி பெற்றன. இயல்பாக இருந்த பகிர்வு, மாற்றம், திருத்தம், மேம்பாடு தடை செய்யப்பட்டது. வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படைத் தேவையாக மாறி வந்த மென்பொருட்கள் ஒரு சில நிறுவனங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டுக்குள் வரும் ஆபத்து இருந்தது. இந்த நிலையின் உக்கிரத்தை உணர்ந்த ரிச்சர்ட் இசுடால்மன், எபன் மாக்லன் போன்ற நிரலாள்களால் உருவாக்கப்பட்டதே கட்டற்ற மென்பொருள் இயக்கம்.

கட்டற்ற மென்பொருள் இயக்கம் கட்டற்ற உரிமத்தோடு அதாவது "மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம் மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்த" ஆகிய உரிமைகளைக் கொண்ட மென்பொருட்களை உருவாக்கினார்கள். (gnu.org/philosophy/free-sw.ta.html) கட்டற்ற உரிமம் மென்பொருட் சுதந்திரத்தையும், அதன் நீட்சியாக மனித சுதந்திரத்தையும் பாதுகாக்கும் என நிலைநாட்டினர். இந்த இயக்கத்தின் வீச்சு அவர்களின் கேட்பாட்டிலும் பார்க்க, அதை அவர்கள் வெற்றிபெற நிறைவேற்றிய வழிமுறைகளில் சிறப்பாக வெளிப்படுகிறது. "Proof of concept plus running code" என்ற நிரூபிக்கப்பட்ட கருத்துரு, வேலை செய்யும் நிரல் என்பதே அந்த வழிமுறை.[1] கணினியை இயக்குதவற்கு தேவையான இயங்குதளத்தை கட்டற்ற வழியில் உருவாக்குவதற்கான குனூ திட்டத்தை 1983 ம் ஆண்டு இசுடால்மன் அறிவித்தார். நிரல்களைத் தொகுப்பதற்கான ஈமாக்சு, குனூ நிரல் தொகுப்பிகள், குனூ வழுநீக்கிகள் போன்றவற்றை இவரே முன்னின்று நிரல் எழுதி சமூகத்துக்கு அளித்தார். [2]

கட்டற்ற மென்பொருட்களின் உரிமை சமூகத்திடம் இருந்ததால் பலர் முன்வந்து கூட்டாக மென்பொருட்களை ஆக்கி, கூட்டாக வழுநீக்கி, திருத்தி, மேம்படுததினர். இவ்வாறு மிகப் பெறுமதி மிக்க மென்பொருட்கள் உருவாக்கப்படலாயின. இவற்றை வணிகங்கள் பயன்படுத்தி விட்டு, சமூகப் பொதுவெளிக்கு ஒன்றும் திருப்பித் தராமல் போகும் வாய்ப்பு இருந்தது. இதைத் தடுக்கவென குனூ அளிப்புரிமை வடிவமைக்கப்பட்டது. இந்த உரிமையின் படி சமூகத்திடம் இருந்து பெறப்படும் மென்பொருட்களும், அவற்றில் இருந்து உருவாக்கப்படும் மென்பொருட்களும் அதே கட்டற்ற உரிமத்தோடு மீண்டும் சமூகத்துக்கு வழங்க்கப்படவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன் உருவாக்கம் படைப்பாக்கப் பொதுவெளிக் காலக் கோட்டில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். 30 ஆண்டுகளில் லினக்சு இயங்குதளம், குனோம்/கேவிஎம் மேசைக்கணினி இடைமுகம், அலுவலகச் செயலிகள், நிரல் மொழிகள், டெபியன் வழங்கி, அப்பாச்சி வலைத்தள வழங்கி, மின்னஞ்சல் வழங்கிகள், தரவுத்தளங்கள், பயர்பாக்சு உலாவி, தண்டர்பேட், நகர்பேசி இயங்குதளம், உள்ளடக்க மேலாண்மை மென்பொருட்கள் என யாரும் வணிக மென்பொருட்கள் இல்லாமல் தனித்தியங்க்கூடிய ஒரு நலம் மிக்கச் சூழலை உருவாக்கினர்கள். அது மட்டும் அல்லாமல், வணிக நிறுவனங்களே இந்த கட்டற்ற மென்பொருட்கள் இல்லாமல் இயங்கமுடியாத ஒரு நிலைமையை உருவாக்கினார்கள். இன்று இந்தியாவில், சீனாவில் என உலகமெங்கும் பயனர்கள், நிரலாளர்கள் தமது விருப்பம் போல பயன்படுத்த, சோதிக்க, மாற்ற, திருத்த, மேம்படுத்த, பகிரக் கூடியதாக உள்ள மென்பொருட்கள் இந்த கட்டற்ற மென்பொருட்களே ஆகும்.

கட்டற்ற மென்பொருள் இயக்கம் தகவல் புரட்சிக்கு ஒர் ஊற்றாக விளங்கிற்று. அதில் பெற்றுக் கொள்ளப்பட்ட கற்றல்கள், பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள் வெவ்வேறு துறைகளுக்கும் தேவை என்று உணரப்பட்டது. மென்பொருட்கள் மட்டும் அல்லாமல், உள்ளடக்கம், பாட நூல்கள், இசை, பல்லூடகங்கள், செய்தி, நூல்கள், தொழில்நுட்பம், வன்பொருட்கள், மரபணுகராதி, அறிவியல் ஆய்வுகள், தரவுகள் என எல்லா அறிவும் கட்டற்ற முறையில் கிடைக்கப்பட வேண்டும் என்ற வேட்கை விரிவாகிற்று. இதற்கு ஒரு தகுந்த தளமாக இணையம் அமையலாயிற்று. முன்னர் எப்போது இல்லாதாவாறு மக்கள் பரவலான முறையில் தொடர்பு கொள்ள, ஒருங்கிணைய, கூட்டாகச் செயற்பட, கூட்டறிவு உருவாக்கத்தில் ஈடுபட இணையம் உதவிற்று.

உலகமெங்கும் கட்டற்ற முறையில் அனைத்த மனித அறிவும் பகிரப்பட வேண்டும் என்ற நோக்குடன் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் (ta.wikipedia.org) 2001 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வெகு விரைவில் நூறாயிரத்திற்ற்கும் மேற்பட்ட பயனர்களின் கூட்டு முயற்சியால் உலகின் மிகப் பெரிய பன்மொழிக் கலைக்களஞ்சியமாக, பல துறைகளில் ஆழமான தரமான தகவல் தொகுப்புகளுடான கலைக்களஞ்சியாமாக விக்கிப்பீடியா வளர்ச்சி பெற்றது. இன்று அகராதி, காப்பகம், நூல்கள், செய்தி என பல தரப்பட்ட தகவல் தொகுப்புகளை விக்கியூடகங்கள் கொண்டு இருக்கின்றன. விக்கிப்பீடியா பயன்படுத்தும் மீடியாவிக்கி மென்பொருளும் கட்டற்ற முறையில் கிடைப்பதால், அதைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான உள்ளடக்கத் திட்டங்கள் இயங்குகின்றன. இந்த நிலையை பெரிய பொருட் செலவில் கிடைக்கும் பிரித்தானிக்கா என்சைக்ளோப்பீடியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வேண்டும்.

கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளியின் இன்னுமொரு சிறந்த எடுத்துக்காட்டு கட்டற்ற பாடத்திட்டங்கள் (www.ocwconsortium.org) ஆகும். பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்கள், உள்ளடக்கங்கள் எவ்வித கட்டணமும் நிர்பந்தங்களும் இல்லாமல் இணையம் மூலம் வழங்கப்படவேண்டும் என்ற நோக்குடன் அவை திறந்துவிடப்பட்டன. பேராசியர்களின் உரைகள், குறிப்புகள், பாடநூல்கள், செயற்திட்டங்கள் என எல்லாவிதமான பாடக் கூறுகளும் இவ்வாறு பகிரப்பட்டன. இவற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டு உலகின் தலை சிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழமாகக் கருதப்படும் மாசற்சூசசு தொழிநுட்ப கல்லூரியின் திறந்த பாடத்திட்டம் (www.ocw.mit.edu) ஆகும். இவர்கள் இவ்வாறு திறந்துவிட்ட பின், இதே பாடத்திட்டங்களை மொழிபெயர்த்து வியட்நாமில் பயன்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு நாம் தமிழிலும் செய்யலாம்.

இணையத்தின் வளர்ச்சியும், குறிப்பாக வலை 2.0 ஏற்படுத்திக் கொடுத்த தொடர்பாடல் ஊடாடல் பகிரல் கருவிகள் இணைய வசதி கொண்ட அனைத்து பயனர்களும் படைப்பாளிகள் ஆகும் வாய்ப்பைத் தந்தன. தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி போன்ற ஒரு வழி ஊடகங்களின் ஆக்கிரமிப்பில் அமிழ்ந்து போய் இருந்த பங்களிப்புப் பண்பாடு மீண்டும் துளிர்க்க இணையம் ஒரு தளம் ஆகிற்று. பயனர்கள் எழுத்தாளர்கள் ஆனார்கள். பயனர்கள் ஒளிப்படக் கலைஞர்கள் ஆனார்கள். பயனர்கள் நிகழ்பட தயாரிப்பாளர் ஆனார்கள். குறும்படங்கள் துரித வளர்ச்சி பெற்றன. பாடல்கள் கலக்கப்பட்டன அல்லது மீளிசைக்கப்பட்டன. நிகழ்படங்கள் மீள்தொகுக்கப்பட்டு புதிய ஆக்கங்கள் செய்யப்பட்டன. இதுவெல்லாம் கணினி வசதி கொண்ட எல்லோருக்கும் கிடைக்கும் படைப்பாக்க வாய்ப்புக்களாக அமைந்தன. இத்தகைய புதிய சுதந்திரமான படைப்புவெளி மரபு ஊடகங்களுக்கும் கம்பனிகளுக்கும் அச்சுறுத்தலுகாக அமைந்தன. அவர்கள் வேகமாக இவற்றை தடை செய்ய முயற்சி செய்கிறார்கள். அரச சட்டங்கள் இன்னும் அவர்களுக்குச் சார்பாகவே இருக்கின்றன.

எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் கிரியேட்டிவ் கொமன்சு உரிமங்கள் அல்லது படைப்பாக்கப் பொதுவெளி உரிமங்கள் (creativecommons.ca). இது ஆக்கர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. படைப்பாக்கப் பொதுவெளி உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் என்ற தெரிவு ஆக்கர்களிடமே விடப்பட்டாலும், இது ஒரு மிதவாத தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

கட்டற்ற மென்பொருள், கட்டற்ற உள்ளடக்கம், திறந்த பாடத்திட்டங்கள், படைப்பாக்கப் பொதுவெளிகள் போன்றவை மேலும் பல தளங்களில் பொதுமங்கள் பாதுகாக்கப்படவும், வளர்ச்சி பெறவும் உதவின. கருவிப் பகிர்வகங்கள், உருவாக்க செயல்கூடங்கள்(fab.cba.mit.edu/content/tools/), சகா-சகா இணைப்பு (p2pfoundation.net), விதை வங்கிகள் (www.tcgn.ca), இரத்த வங்கிகள், திறந்த தரவுகள் (data.vancouver.ca), சூரிய ஆற்றல் பொதுமங்கள் (solarcommons.org), நீர் பொதுமங்கள் (ourwatercommons.org), சூழல் காப்பகங்கள், விக்கிகசிவுகள் (wikileaks.info) போன்று பல பொதுமங்கள் எழுச்சி பெற்று வருகின்றன. பொதுமங்கள் பற்றிய விழுப்புணர்வும், அவற்றைப் பாதுகாப்பது வளர்ச்சி செய்வது பற்றிய திட்டமிடலுக்கும் என்றும் பல அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன, எ.கா பொதுமங்களில் இருந்து (onthecommons.org), பொதுமங்களுக்கான மூலோபாயம் (www.commonsstrategies.org).[5]

மொழி, அறிவியல், கணிதம், கலைகள் எல்லாம் காப்புரிமைக்கு உட்பட்டு இருந்தால் அல்லது மூடப்பட்டு இருந்தால் மனித முன்னேற்றம் தடைபட்டு இருக்கும். அவை புத்தாக்கத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அடிக்கல்கள் ஆகும். பொருட்களை நோண்டுவதால், மாற்றி அமைப்பதால், கலைகளை, கருத்துக்களை கட்டுடைப்பதால் மீளமைப்பதால், ஒன்றில் இருந்து இன்னொன்றை கட்டமைப்பதால் உருவாவதே படைப்பாக்கம், புத்தாக்கம். அதற்கு அவசியமானதே கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளிகள்.

கட்டற்ற படைபுப் பொதுவெளிகள் இதுவரை இருந்து வந்த சமூக மாதிரிகளில் இருந்து ஒரு முக்கிய முறிவு ஆகும். இது படிநிலைகள் தளர்ந்தது; பரவலானது; நுகர்வை மட்டும் அல்லாமல் ஆக்கத்தையும் பங்களிப்பையும் வேண்டுவது; கூட்டுச் செயலாக்கத்தையும் கூட்டு மதிநுட்பத்தையும் ஏதூவாக்குவது; வெளிப்படைத்தன்மை கூடியது; விடுதலை விழுமியங்களைக் கொண்டது. இவை தொலைநோக்கு கோட்பாட்டு இலக்குகள் அல்ல. நூற்றுக்கணக்கான திட்டங்களில் நிறைவேற்றப்பட்ட இன்றைய நிசங்கள்.

ஆங்கிலச் சூழலும் பார்க்க தமிழ்ச் சூழலில் கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளிகளுக்கான தேவை அதிகம் உள்ளது. இன்னும் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு கணினியோ இணையமோ கிட்டவில்லை. நாம் கட்டற்ற மென்பொருட்களை பரவலாகப் பயன்படுத்தினால், இந்த அடிப்படைத் தொழில்நுட்பங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லுதல் இலகுவாகும். தமிழில் நூல்கள் எழுதப்பட்ட பின் மீள் பதிக்கப்படுதலோ, அல்லது நூலகங்கள் மூலம் பகிரப்படுதலோ அரிது. கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. இவற்றைப் பொதுவெளியில் எண்ணிமப் படுத்தி பகிர்ந்தல் அவசியமாகும். இதற்கு நூலகத் திட்டம் (noolaham.org), மதுரைத் திட்டம், தமிழம் போன்ற திட்டங்களை பலப்படுத்தல் வேண்டும். தமிழ்நாடு அரசு அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவது இன்னும் விரிபு பெறவேண்டும். அரச, புரவலர்கள் ஆதரவில் உருவாக்கப்பட்ட அறிவியல், வாழ்வியல், மருத்துவ, சித்த மருத்துவ, தமிழ், சிறுவர் கலைக்களஞ்சியங்கள் உடனடியாக பொதுவெளியில் தரப்படவேண்டும். எமது கலைகளை நாம் மீட்டெத்து பங்களிப்புக் கலைகள் ஆக ஆக்க வேண்டும். வெறுமே திரைப்படங்களிலும், "சங்கமங்களிலும்" காட்சிப்படுத்தப்படும் கோதுகளாக இல்லாமல், ஓர் ஆழமான இயல்பான பங்களிப்புப் பண்பாட்டின் கூறுகளாக அவை அமையவேண்டும். காப்புரிமை அற்ற கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளிகளை பொதுமங்களை விரிவாக்குவதன் மூலமே நாம் நலம் மிக்க, அறம் மிக்க, படைப்பாக்கம் மிக்க ஒரு சூழலையும் சமூகத்தையும் படைக்க முடியும்.


மேற்கோள்கள்
1.↑ அடம் கோகன். (நவம்பர் 15, 1999). மைக்ரோசோட் அனுபவிக்கும் ஏகபோக அதிகாரம். (ரைம்சு). மீட்டெக்கப்பட்டது: http://www.time.com/time/magazine/article/0,9171,992551-1,00.html
2.↑ மற் பெக்காம். (மார்ச் 23, 2011). கூகிள் நூல் ஒப்பந்தத்தை நீதிபதி ஏகபோக கவலைகளால் நிராகரித்தார். பிசிவேர்ல்ட். மீட்டெடுக்கப்பட்டது: http://www.pcworld.com/article/222963/judge_rejects_google_book_deal_over_monopoly_concerns.html
3.↑ தோமசு பே நிறுவனம். (2003). பொதுமங்களின் நிலை (அறிக்கை). மீட்டெக்கப்பட்டது: http://onthecommons.org/sites/default/files/stateofthecommons.pdf
4.↑ எபன் மாக்லன். கட்டற்ற, திறந்த மென்பொருள்: புதிய கல்விசார் பொதுமங்களுக்கான கருத்தியல். (2009). (ஒலிக்கோப்பு). மீட்டுக்கப்பட்டது: http://www.youtube.com/watch?v=tbcy_ZxXLl8
5.↑ யே வோல்சுபிர். (2011). நாம் பகிர்வன எல்லாம்: பொதுமங்களுக்கான வழிகாட்டி.

Theme by Danetsoft and Danang Probo Sayekti inspired by Maksimer